Feb 14, 2017

மஹா சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். நம் சங்கடங்களை நீக்கும் சதுர்த்தி தான் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும்.

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்றும் நம்பப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை;


ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் முன் நெய் விளக்கேற்றி, விரதம் துவங்கச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

கணபதி விக்ரஹம் இருந்தால், அவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மாப்பொடி, மஞ்சள், திரவியம், பால், தயிர், பஞ்சாம்ருதம், தேன், இளநீர், நெய், விபூதி, சந்தனம் ஆகிய திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யலாம். கும்பம் ஆவாஹனம் செய்ய தெரிந்தவர்கள், கும்பாபிசேகம் செய்யலாம். படமாக இருந்தால், புஷ்பத்தால் பிரோக்ஷணம் செய்தால் போதும்.

பின்னர், ஸ்வாமிக்கு வஸ்திரம் சாற்றி, அலங்காரம் செய்து, சந்தனம், குங்குமம், புஷ்பம் சார்த்தவும்.

நைவேத்யமாக, கற்கண்டு, பழங்கள், அப்பம், மோதகம், வடை, எள்ளுடை, கரும்பு, பிட்டு, பேரீச்சம் பழம், தேன், பால், சுண்டல், கேசரி, அதிரசம், போலி, ரவாலட்டு, ஜாங்கிரி போன்று யாதாவது படைக்கவும்.

ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை 108 முறை ஜபித்தல் விசேஷம். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சந்திரோதய சமயத்தில், மீண்டும் நீராடி, விநாயகரை மனதாரப் பூஜித்து, சந்திர பகவானையும் பூஜிக்க வேண்டும். அருகம்புல்லால் ஆனை முகனை அர்ச்சிப்பது நலம் பல தரும். நான்காம் பிறையை அறியாமல் பார்க்க நேர்ந்தால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க அந்த தோஷம் நீங்கும்.

இருபத்தோரு முறைகள் ஸ்ரீ கணேச‌ அதர்வசீர்ஷம் ஜபம் செய்வது மிகச் சிறந்தது. இயலாவிடில் தகுந்தவர்களைக் கொண்டு இந்த ஜபம் செய்விக்கலாம்.
மாலை நேரம், தெரிந்த கணபதி தமிழ் ஸ்துதிகள், கணேச பஞ்சரத்னம், சங்கஷ்டஹர ஸ்தோத்ரம், கணபதி அஷ்டகம், விநாயகர் அகவல், அஷ்டோத்ரம், திரிசதி அர்ச்சனை செய்து,  புஷ்பாஞ்சலி செய்யலாம்.

விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு. விநாயகருக்கு, 21 மோதகங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. நாள் முழுவது உபவாசம் இருக்க இயலாவிடில், பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

கோவிலுக்குச் சென்று விநாயகரை தரிசித்தல் சிறப்பு. பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம் படிப்பது அளவில்லாத நன்மை தரும்.
தொடர்ந்து ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாய்கருக்கு சிறப்பு வழிபாடு செய்து விரதம் இருந்தால், நம் சங்கடங்களை எல்லாம் தீர்ப்பார் சங்கடஹர கணேசர்.

சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளைத் தரும் சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்து நலம் பெறுவோம்.

முத்தாரம்மே சரணம் !

Posted by Mutharamman Satsangam


Feb 9, 2017

தைப்பூச திருநாள்

தை மாதம் பூரணை தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க தைப்பூச திருநாள் அமைகின்றது.

தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம். சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை என்று கூறபடுகின்றது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் அம்மையுடன் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது. முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன்  தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப்படுகிறது. 

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

"தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.
தேவர்களின் குருவான, பிரகஸ்பதியின் ஜென்ம நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு சிறப்பு வாய்ந்தது.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைப்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். 

திருவிடைமருதூரில் தைப்பூசம்


ஆசையை அறவே நீக்கிய விபண்டகர் என்ற முனிவருக்கு, சிவபெருமானை அர்த்த நாரீஸ்வர வடிவில் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அதை நிறைவேற்றிக் கொள்ளக் கடுந்தவம் மேற்கொண்டார்.

தைப்பூசம், வியாழக்கிழமை, ரிஷப லக்கினம் கூடிய வேளையில், மருத மரத்தடியில் சிவபெருமான் உமையரு பாகனாக, விபண்ட கருக்குத் தரிசனம் தந்தார்.

எண்ணம் ஈடேறிய விபாண்டகர் கைகளைத் தலைக்கு மேல் கூப்பியபடி அர்த்த நாரீஸ்வரரை வணங்கி வலம் வந்தார். உள்ளம் உருகித் துதித்தார்.
விபண்டகா! வேண்டியதைக் கேள்!” என்றார் சிவபெருமான்.
விபண்டகர், “ஆலாலம் உண்ட ஆரமுதே! தாங்கள் இங்கேயே இருந்து, மக்களுக்குத் தரிசனம் தந்து அவர்களின் குறைகள் எல்லாவற் றையும் தீர்க்க வேண்டும்என வேண்டினார்.

அப்படியே ஆகட்டும்என அருள்புரிந்தார் அர்த்த நாரீஸ்வரர்.

தைப்பூசத்தன்று இறைவன் மருதமரத்தினடி யில் தரிசனம் தந்த அத்திருத்தலம்... திரு விடைமருதூர். நேர்மையாக ஆட்சி செய்துவந்த மன்னர் வீரசோழன் என்பவர் திருவிடை மருதூரில் இடைமருது ஈசனுக்கு நல்ல முறையில் ஆலயம் கட்டிச் சீரமைத்து, வேதவல்லுனர்களுக்கு நிறைய தானம் வழங்கி, கல்வியாளர்களுக்குக் கிராமங்களை வழங்கினார்.
அதன் பிறகு, அத்திருத்தலத்திலே இருந்த ரோமச முனிவரை வணங்கி, “முனிபுங்கவரே! இங்கே எழுந்தருளி யிருக்கும் ஸ்வாமிக்கு உற்சவம் கொண்டாட வேண்டும். தாங்கள் தான் அதற்கு வழிகாட்ட வேண்டும்.” என வேண்டினார் மன்னர்.

மன்னா! தை மாதம் பூச நட்சத் திரத்தன்று புஷ்யோத்ஸவம் கொண் டாடு.” எனச் சொல்லி வழி காட்டினார் ரோமசர்மன்னர் அப்படியே செய்தார். பிரம்மாதி முனிவர்கள் எல்லாரும் வந்து சிறப்பூட்டினார்கள். அது புண்ணியகாலமானது.


இப்படிப்பட்ட தைப்பூச நாளன்று, திருவிடைமருதூர், கல்யாண தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷ மாகச் சொல்லப்படுகிறது. கல்யாண தீர்த்த வரலாற்றைத் தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.

திருவிடைமருதூரில் பரத்வாஜர், விச்வா மித்ரர், கௌதமர் முதலான மாமுனிவர்கள் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்தார்கள்.

அவர்களின் தவப்பலனாக தைப்பூச நாளன்று இறைவனும் அம்பிகையும் அவர் களுக்குத் தரிசனம் தந்தார்கள்.

காவிரியின் இருபக்கங்களிலும் (60 கி.மீ. சுற்றளவிற்கு) பரவியிருந்த முனிவர்கள் அனைவரும், அத்தெய்விகக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்தார்கள்.

அதைப் பார்த்த ஈசனும் அம்பிகையும் கண்ணீர் மல்கக் காட்சியளித்தார்கள். அவர்களின் கண்ணீர், ஏற்கெனவே புனிதமான காவிரியில் கலந்து, அதன் புனிதத்தை மேலும் அதிகமாக்கியது. மங்கலகரமான அத்தீர்த்தம் அன்று முதல் கல்யாண தீர்த்தம் எனப் பெயர் பெற்றது.

இன்றும் தைப்பூசத்தன்று இறைவன், கல்யாண தீர்த்தத்திற்கு, எழுந்தருளி தீர்த்தப் பிரசாதம் வழங்குவது நடைபெற்று வருகிறது.
தைப்பூசத்தன்று கல்யாண தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி கிட்டும். உடல் நோய்களும் மன நோய்களும் நீங்கும். பாபமும் பயமும் விலகும். புத்தி தெளிவடையும். சந்ததி சிறக்கும்.

வேணுவனத்தில் தைப்பூசம்


வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தாற் போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி மக்கள் ஆகியோரின் வருத்தத்தைப் பார்த்த வேதபட்டர் மனம் குமைந்து சிவபெருமானைத் துதித்தார்.

ஒருநாள்...அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளி, “வேத பட்டரே! யாம் இருக்கும் வேணு வனத்திற்கு வந்தால், உன் துயரங்கள் நீங்கும்.” என்று சொல்லி மறைந்தார்.


வேதபட்டருக்குக் கனவு கலைந்தது. “வேதப்பொருளே! நீ சொன்ன வேணுவனத் திற்கு இதோ வருகிறேன்.” எனச் சொல்லிக் குடும்பத்தோடு பொருணை நதியில் நீராடி, கோவிலுக்கும் சென்று சிவன் சந்நிதியில் நின்று தரிசித்து, சிந்தை உருக வழிபட்டார்.

அதன் பயனாக...அவருக்கு, சிவனருளால் அனைத்துச் செல்வங்களும் சேர்ந்தனவேதபட்டர், செல்வங்கள் சேர்ந்தும் சிவனை மறக்கவில்லை. தினந்தோறும் செந் நெல் அறுத்துச் சிவபெருமானுக்கு அமுதாக்கி, வழிபட்டார். எதிர்பாராமல் மழை பொய்த்துப் போனது. நாடெங்கும் கடும் பஞ்சம் நிலவியது.


அப்போது, சிவபெருமான் வேதபட்டரின் பக்தியைச் சோதனை செய்து, பக்தரின் பெருமையை எங்கும் பறை சாற்ற விரும்பினார்.

அவ்வளவுதான்! நாளாக நாளாக வேதபட்ட ரின் செல்வங்கள் குறைந்தன.
அந்நிலையிலும் வேதபட்டர் தன் வழி பாட்டை நிறுத்தவில்லை. வீடு வீடாகச் சென்று யாசகம் செய்து கிடைத்த நெல்லை அமுதாக்கி, ஆலாலம் உண்டவனுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தார்.

ஒரு நாள்...இறைவனுக்கான நெல்லை, இல்லந் தோறும் சென்று பெற்று வந்த வேதபட்டர் அதை இறைவனின் சந்நிதி முன்னால் காயப்போட்டு விட்டு, நீராடச்சென்றார்.


அதற்காகவே காத்திருந்ததைப் போல, மழை கொட்டியது. வேதபட்டர் திடுக்கிட்டார். “சிவபெருமானே! உனக்கு அமுது படைப்பதற் கான நெல்லை உன் சந்நிதி முன்னால் காயப் போட்டுவிட்டு வந்தேன். இப்போது மழை கொட்டுகிறது. அந்த நெல்லும் போய்விட்டால், உனக்கு அமுது படைக்க வேறு நெல்லுக்கு வழியும் கிடையாதே! என்ன செய்வேன்? என்ன செய்வேன்?” என்று புலம்பிப் பதறியபடியே கோவிலை நோக்கி ஓடினார்.

அங்கு போனதும் வேதபட்டரின் பதற்றம் மறைந்து, அவர் உள்ளத்தில் 
ஆச்சரியம் குடிகொண்டது.

சந்நிதி முன்னால் காயப்போட்டிருந்த நெல்லைச் சுற்றி, அணைகட்டியது போல மழை நீர் நின்றிருந்தது. ஒரு துளி மழை நீர்கூட நெல்லின் மேல்படவில்லை. அதற்கும் மேலாக நெல்லின் மீது மட்டும் பளிச் சென்று வெயில் அடித்துக் கொண்டிருந்தது. வேலி போட்டது போல!
வேணுபட்டர் ஆண்டவனின் அருளை நினைத்து வியந்து, அங்கிருந்து ஓடிப்போய் அரசரிடம் நடந்ததை விவரித்தார்.

அரசரானமுழுதும் கண்ட ராமன்வேதபட்டரையும் இழுத்துக் கொண்டு சிவபெரு மான் திருவருளை வியந்தபடி வேணுவனநாத ரின் சந்நிதியை நோக்கி ஓடினார்.

அங்கே வேணுவனநாதரை வணங்கி, “அலைகடலில் விளைந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்த இறைவா! உலகிற்காக மழை பொழிந்து, உத்தம பக்தரான வேத பட்டரின் நெல்மட்டும் நனையாமல் வேலி யிட்டுக்காத்த வேணுவனநாதா! இதன் காரண மாக உங்கள் திருநாமம், இன்று முதல் நெல்வேலிநாதர் என வழங்கப்பட வேண்டும்.” என வேண்டினார்.

அரசரின் வேண்டுகோளை அப்போதே நிறைவேற்றினான் ஆண்டவன்.
அன்றுமுதல் வேணுவனம், திருநெல்வேலி என்றும், வேணுவனநாதர் (திரு) நெல்வேலி நாதர் எனவும் அழைக்கப்பட்டார்.

நெல்லுக்கு வேலியிட்டு இறைவன் காத்த இந்நிகழ்ச்சி, தைப்பூசத் திருவிழாவின் போது, திருநெல்வேலியில் இன்றும் திருவிளையாட லாக நிகழ்கிறது.


உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்...

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam